நினைத்தாலே இனிக்கும்...

ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கும் ஊர் மக்கள் , மாலை நேர திண்ணைப் பேச்சுக்கள், கோவில் திருவிழாக்கள்.. (ஒரு சிறு தகவல்: எங்கள் ஊர் சிவன் கோவிலில் அனைத்து தெய்வங்களும் ஆகம விதிப்படி அமைந்திருக்கும்...கோவில் திருக்குளம் உட்பட..), கோடைக் காலங்களின் சிறுவர் கூட்டம்...,இளைஞர்களின் சுழற்சி முறை சிறுநூலகம்.., மழை ஈரம் சுமந்த தெருக்கள்.. மார்கழி மாதக் கலர்க் கோலங்கள்.. டிசம்பர் பூக்கள்.. பொங்கலும் தீபாவளியும் விட்டுச் செல்லும் இனிப்புச் சுவடுகள்... நூலில் கட்டிப் பறக்க விட்ட தட்டான் பூச்சிகள்.., நெல்லுக்கும் கரும்புக்கும் காவல் இருந்த நாட்கள்.. எப்போதாவது வரும் வெள்ளம் பார்க்க வெள்ளாற்றை நோக்கி படை எடுக்கும் மக்கள் கூட்டம்..., மாமர நிழல் தரும் சுகம்.., மோட்டார் குளியல், சிறுவர்களின் களிமண் வண்டிகள், பம்பரமும் கயிறுமாக ஆலமரம் தேடி ஓடும் சிறுவர்கள்.. கையில் பம்பரம் விட்டு குழந்தைகளை ஆச்சர்யப்படுத்தும் பெரியவர்கள்.. கோலி, கபடி என சீசனுக்கேற்ற விளையாட்டுகள் ..பஞ்சாயத்து அலுவலக தொலைக்காட்சி, வெள்ளிக்கிழமை பொதிகையின் ஒளியும் ஒலியும்... ஊரை விட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் வழியில் வணங்கிச்செல்லும் அய்யனார் கோவில்... என ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவதொன்றை நினைவுபடுத்திச் செல்லும் கிளிமங்கலம்..

என் தலைமுறையில் கிளிமங்கலத்திலேயே படித்து வளர்ந்த ஒரு சிலரில் நானும் ஒருத்தி... எங்கள் ஊர் அரசினர் நடுநிலைப் பள்ளியில் படித்த பெரும்பாலானவர்கள் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர்.. இன்றும் அதே புளியமரமும் அங்கே விளையாடும் சிறுவர்களும் அங்கு படித்த ஒவ்வொருவரின் பள்ளிக் காலங்களையும் ஒருமுறையேனும் நினைவு படுத்தத் தவறுவதில்லை...ஒவ்வொரு பொங்கலின் போதும் பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மிகப் பிரபலம் கிளிமங்கலத்தில்...

நகரங்களின் சுவடே இல்லாமல் இருந்தாலும் நகரத்திற்குரிய அனைத்துத் தகுதிகளும் சில ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் ஊருக்கு உண்டு... இன்னும் சில பேருந்துகளும் சில கடைகளும் இருந்திருந்தால் கிளிமங்கலமும் ஒரு சிறு நகரமாகி இருக்கும்... விவசாயத்தையே அடிநாதமாகக் கொண்ட கிளிமங்கலம் பெருமழைக்காலங்களில் ஒரு சிறு தீவாகிவிடும்.. மழை நீர் தேங்கி நிற்கும் வீதிகள் இப்போது இல்லை.. எங்கும் சிமென்ட் சாலைகள்.. நவீன எந்திரங்கள் விவசாயத்தை கொஞ்சமே எளிமையாக்கி விட்டன.... எங்களுடன் சேர்ந்து கிளிமங்கலமும் வளர்ந்தது... இப்போது தொலைபேசியும் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லாத வீடுகள் மிகக் குறைவு... மிதிவண்டிகளுக்குப் பதில் ஹோண்டாவும், பஜாஜும் வீடுகளை ஆக்கிரமிக்கத் துவங்கி விட்டன...

எல்லா விதத்திலும் தன்னிறைவு பெறத்துடிக்கும் கிளிமங்கலத்தில் சிறு சிறு வருத்தங்களும் உண்டு... யாருமற்ற வீதிகளையும், எப்போதும் பூட்டி இருக்கும் வீடுகளையும் பார்க்கும் போது இந்த தலைமுறைக்குப் பிறகு விவசாயமே மறக்கப் பட்டு விடலாம் என்ற பயம் வருகிறது...வளர்ச்சியும் எதிர்காலமும் மக்களை நகரங்களை நோக்கி நகரச் செய்துவிட்டன... இந்தப் பிரச்சனை தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் பொருந்தும்... ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் , வருத்தங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் உதவுவதிலும், ஊருக்காக ஒன்று சேர்ந்து நிற்பதிலும் கிளிமங்கலத்து மக்களுக்கு நிகர் அவர்களே...

கிளிமங்கலத்தின் நினைவுகளோடு...
கயல்விழி (எ) வானதி..

0 comments:

Post a Comment